The Climate Book & பூமி இழந்திடேல்: ஓர் ஒற்றுமை!
தமிழில் முன்னுதாரணமற்ற இத்தகைய முன்னெடுப்பின் நோக்கமும் ஆக்கமும் ஒப்புநோக்க கிரெட்டாவின் தொகுப்புக்கு இணையானது என்று கருத இடமிருக்கிறது.
இளம் காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் தொகுத்த ‘The Climate Book’ உலகின் பல பகுதிகளில் நேற்று வெளியாகியிருக்கிறது. மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட, மனிதகுலம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த புவிக்கே அச்சுறுத்தலாக மாறிவிட்ட நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் காலநிலை மாற்றம் குறித்து, உலக அரசியல் தலைவர்கள் உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 2018இல் ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன் ‘பள்ளி வேலைநிறுத்த’ப் போராட்டத்தைத் தொடங்கினார் கிரெட்டா. இதன் மூலம் உலகளாவிய கவனம் பெற்ற கிரெட்டா, உலகம் முழுவதும் உள்ள இளையோரிடம் காலநிலை மாற்றம் குறித்த தீவிரத்தை உணரச் செய்து காலநிலைச் செயல்பாடுகளுக்கு அவர்களை ஒன்றுதிரட்டினார். ‘காலநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம்’ என்கிற உலகளாவிய காலநிலைப் போராட்டங்களைக் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக அவர் முன்னெடுத்தார்; “எவ்வளவு தைரியம் உங்களுக்கு?” என உலக அரசியல் தலைவர்களை நோக்கி ஐ.நா.வில் கிரெட்டா முழங்கினார்.
காலநிலை மாற்றம் சார்ந்த உலகளாவிய உரையாடலில் கிரெட்டாவின் வருகை நிச்சயம் ஓர் முன்னகர்வே. ‘எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ (#FridaysForFuture) என்கிற அவரது பள்ளி வேலைநிறுத்தப் போராட்டம் இப்போது 219ஆவது வாரத்தை எட்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில் தான் காலநிலை மாற்றம் சார்ந்த தன்னுடைய தொடர் செயல்பாடுகளில் ஒன்றாக ‘காலநிலைப் புத்தக’த்தைக் கிரெட்டா வெளியிட்டிருக்கிறார். அறிவியலாளர்கள், காலநிலையியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர் என 100-க்கும் மேற்பட்டோர் பங்களித்திருக்கும் கட்டுரைகள் நாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியின் பல்வேறு பரிமாணங்களை விளக்குகின்றன. காலநிலை மாற்றம் சார்ந்த சொல்லாடலில் மிக முக்கிய வரவாகப் பார்க்கப்படும் இந்தப் புத்தகத்தின் அட்டையில் இடம்பெற்றிருக்கும் ‘காலநிலைக் கோடு’களை உருவாக்கியவர் பேராசிரியர் எட் ஹாகின்ஸ். Warming stripes என்றும் அழைக்கப்படும் இக்கோடுகள், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மாறிவந்திருக்கும் உலக நாடுகளின் வெப்பநிலையைக் குறிக்கின்றன. புவியின் சராசரி வெப்பநிலை காலப்போக்கில் தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பதை எளிமையாக உணர்த்தும் இந்தக் கோடுகளைத்தான் 2021 பிப்ரவரியில் வெளியான கனலியின் (‘பூமி இழந்திடேல்’) சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழின் அட்டைப்படமாக நாம் பயன்படுத்தியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கிரெட்டாவின் புத்தகத்துக்குப் பங்களித்தவர்களில் Amitav Ghosh, Bill McKibben, Elizabeth Kolbert, Naomi Klein, Sunita Narain ஆகியோரின் கட்டுரைகள், பேட்டிகளின் மொழிபெயர்ப்பு ‘பூமி இழந்திடேல்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ளன; மற்ற சிலரைப் பற்றிய குறிப்புகளும் அவர்களின் ஆக்கங்கள் பற்றிய பதிவுகளும் நம்முடைய தொகுப்பில் உள்ளன. சமகாலத்தில் காலநிலை மாற்றம் பற்றிய உலகளாவிய சொல்லாடலைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும், தமிழை உலகளாவிய சொல்லாடலுக்குள் கொண்டுசெல்ல வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘பூமி இழந்திடேல்’ தொகுப்பு வெளியானது. காலநிலை மாற்றத்தின் அறிவியல், வரலாறு, அரசியல், தத்துவம், புனைவு, பேட்டிகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல அம்சங்களை ‘பூமி இழந்திடேல்’ உள்ளடக்கியிருக்கிறது. தமிழில் முன்னுதாரணமற்ற இத்தகைய முன்னெடுப்பின் நோக்கமும் ஆக்கமும் ஒப்புநோக்க கிரெட்டாவின் தொகுப்புக்கு இணையானது என்று கருத இடமிருக்கிறது; இப்படியொரு ஆக்கம் தமிழில் சாத்தியமாகியிருப்பதும் உள்ளபடியே பெருமை தருவது. எனினும், இத்தகைய ஆக்கங்கள் பரவலாக வாசித்து விவாதிக்கப்பட்டு காலநிலை மாற்றம் சார்ந்த புரிதல் சமூகத்தில் தீவிரமடைவதும் ஆட்சியாளர்கள் அதுகுறித்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பதுமே நம்முடைய தேவையும் எதிர்பார்ப்பும்.
இணைப்புகள்
‘பூமி இழந்திடேல்’ இணையத்தில் பெற: Commonfolks, Panuval, Crownest; அலைபேசி: +91 9080043026
நம் வீடு பற்றி எரிகிறது!: கிரெட்டா துன்பர்க் உரைகள் – தமிழில்: சு.அருண் பிரசாத் (கிண்டில் பதிப்பு)
தகடூர் புத்தகப் பேரவை நடத்திய இணையவழிக் கூடுகையில் ‘பூமி இழந்திடேல்’ பற்றி ஆய்வாளரும் தொகுப்பின் பங்களிப்பாளர்களில் ஒருவரான நாராயணி சுப்ரமணியனின் உரை.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உயிர் மூச்சு பகுதியில் வெளியான குறிப்பு: காத்திரமான தொகுப்பு