தமிழ் அறிவுப் பண்பாடும் பதிப்புலகமும்
அக்டோபர் 26 (சனிக்கிழமை) சிந்தன் புக்ஸ் லீலாவதி அரங்கத்தில் நடைபெறும் தமிழ் மார்க்சியர் & ஸ்டீபன் நினைவுச் சொற்பொழிவுகள் நிகழ்வில் பேசவிருக்கிறேன்.
நான் முதன் முதலில் ‘பார்த்த’ புத்தகக் காட்சி, முதல் மதுரை புத்தகக் காட்சிதான். என் வாழ்வும் தொழிலும் புத்தகம் சார்ந்த ஒன்றாக உருப்பெற்றதற்கு அதுவே அடித்தளமிட்டது என்பதை இதழியல் சார்ந்த என்னுடைய கனவுகள் மெய்ப்படத் தொடங்கிய நாட்களில் உணர்ந்தேன்; அடுத்த நிறுத்தம், சென்னை புத்தகக் காட்சி.
2015ஆம் ஆண்டிலிருந்து சென்னை புத்தகக் காட்சிக்கு வந்துகொண்டிருக்கிறேன். எனினும், 2024ஆம் ஆண்டு புத்தகக் காட்சி அதுவரை இல்லாத பல்வேறு புதிய அனுபவங்களையும் அறிதல்களையும் கொடுத்தது; இன்னும் சில மாதங்களில் பதிப்புத் துறைக்குள் வருவேன் என அப்போது எனக்குத் தெரியாது. கடந்த சில ஆண்டுகளாகவே பதிப்புலகம் சார்ந்த என்னுடைய ஈடுபாடு தீவிரம் பெற்றுவந்த நிலையில், சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சிக்குப் பிறகு அது மேலும் ஆழம்பெற்றது.
புதிய நூல்கள் குறித்தும் பொதுவாக தமிழ்ப் பதிப்புலகம் குறித்தும் நண்பர்களுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் உரையாடி வருகிறேன். புத்தகக் காட்சி நாட்களில் தோழர் தமிழ் காமராசனும் நானும் திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை சபரி டீக்கடையில் மாலை நேரங்களில் அத்தகைய உரையாடல்களில் அதிக நேரத்தைச் செலவிட்டிருந்தோம். இந்த உரையாடல்களை ஒழுங்குபடுத்த தனி வலைப்பூ ஒன்றைத் தொடங்குவதற்குக் கூட திட்டமிட்டோம். ஆனால், அது இன்னும் செயல்வடிவம் பெறவில்லை.
இந்தப் பின்னணியில்தான், இந்த ஆண்டு ஸ்டீபன் நினைவுச் சொற்பொழிவுக்குத் தமிழ் காமராசன் என்னைப் பேசக் கேட்டார்; மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். இத்தகைய செயல்பாடுகளுக்கு என்னைத் தொடர்ச்சியாக ஊக்குவிக்கும் எமது பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களுக்கு என் அன்பு.
அக்டோபர் 26 (சனிக்கிழமை) சிந்தன் புக்ஸ் லீலாவதி அரங்கத்தில் நடைபெறும் தமிழ் மார்க்சியர் & ஸ்டீபன் நினைவுச் சொற்பொழிவுகள் நிகழ்வில், ‘தமிழ் அறிவுப் பண்பாடும் பதிப்புலகமும்’ என்கிற தலைப்பில் பேசவிருக்கிறேன். நண்பர்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறேன்.