சலபதியைப் பின்தொடர்தல்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ஆகஸ்ட் 2 அன்று, வரலாற்றாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு நடந்த சாகித்திய அகாதெமி விருது பாராட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்கிற தன்னுடைய ஆய்வு நூலுக்காக 2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றிருக்கும் ஆசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு முதற்கண் என்னுடைய வாழ்த்துகளும் வணக்கங்களும்.
இந்த நிகழ்வில் என்னைப் பேச அழைத்த அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கும் பதிப்பாளர் காலச்சுவடு கண்ணன் அவர்களுக்கும் என்னுடைய நன்றி!
சலபதி - கண்ணன் நட்பிலிருந்து தொடங்குவது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன். ‘எம்.எஸ்.எஸ். பாண்டியன் - காலச்சுவடு கட்டுரைகள்’ நூலுக்குக் கண்ணன் பின்னுரை எழுதியிருக்கிறார். அதில் 1993 காலகட்டத்தில் ‘காலச்சுவ’டை மீண்டும் தொடங்கும் முன்னெடுப்பில் இருந்த கண்ணன், சலபதியுடனான சந்திப்புகளைப் பற்றி எழுதும்போது பாண்டியன் மீதான சலபதியின் பிரேமையைப் பதிவுசெய்கிறார்: “அப்போது அவருக்குப் பாண்டியன் மோகம் உச்சத்திலிருந்தது. அவர் பேச்சில், நட்சத்திர எழுத்தாளன் வாயில் பொய்போல், பாண்டியன் பெயர் இடைக்கிடையே வந்துகொண்டேயிருக்கும். எனவே பாண்டியனைச் சந்திக்கச் சென்றோம். பாண்டியன் இளையவர்களுக்கு மிக கவர்ச்சிகரமான ஆளுமை.”
சலபதிக்குப் பாண்டியன் எப்படியோ எங்களுக்குச் சலபதி. எனக்கு என்றல்லாமல், எங்களுக்கு என நான் குறிப்பிடுவது ஜெனீவாவில் பொருளியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கும் நண்பர் ரகுநாத், தன்னுடைய அறையில் சலபதியின் படத்தை மாட்டியிருக்கும் இஸ்க்ரா, சலபதியை அடிக்கடி தன் கனவில் சந்திக்கும் அழிசி ஸ்ரீநிவாச கோபாலன், அகில உலக சலபதி ரசிகர் மன்றத் தலைவர் கௌதம் ராஜ் போன்ற பல நண்பர்களைத்தான். சலபதியை முதல் முறையாகச் சந்திக்கச் சென்ற அனுபவத்தை கௌதம் ராஜ் இப்படிப் பதிவுசெய்துள்ளார்: “புதுமைப்பித்தன் பிறந்தநாள் அன்று சலபதியை நேரில் சந்தித்தேன், காதலியை முதல்முறை சந்திக்கப்போகும் போது இருக்கும் அதே பதற்றம். புத்தகங்கள் நிறைந்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்து கணினி திரையில் படித்துக்கொண்டிருந்தார்.”
கல்விப் புலம் சார்ந்தவர்கள் மட்டும் என்றில்லாமல், பல்வேறு புலங்களில் இயங்குபவர்களும் சலபதியின் ‘கருத்துகள் தரும் போதை’க்கு ஆட்பட்டிருக்கிறோம்.
ஆ.இரா. வேங்கடாசலபதி என்கிற பெயரை நான் முதன்முதலில் அறிமுகம் செய்துகொண்டது என்னுடைய 16 வயதில்; 2012ஆம் ஆண்டு காலமான பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் எரிக் ஹாப்ஸ்பாமுக்குச் சலபதி காலச்சுவடில் எழுதிய அஞ்சலிக் கட்டுரைதான் இருவரையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. பெயரை அறிமுகம் செய்துகொண்டாலும், அவரை நான் அறிந்தது, ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ நூலில்தான். அப்போது நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் மாணவன். சந்திக்கும் விழைவு எழுந்தது. அந்தச் சமயத்தில்தான் அவருக்கு விளக்கு புதுமைப்பித்தன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. மதுரையில் நடந்த விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்குதான் அவரை முதலில் பார்த்தேன்; நிகழ்வுக்கு மறுநாள் காலை அவரது அறையில் சந்தித்தேன். அப்போது அவர் ஜான் டார்வினின் After Tamerlane வாசித்துக்கொண்டிருந்தார். எங்கள் சமீபத்திய சந்திப்பில், சுனில் அம்ரித்தின் The Burning Earth நூலை எனக்கு வாசிக்கக் கொடுத்திருக்கிறார்.
இந்த 13 ஆண்டுகளில், தூரத்திலிருந்து பார்த்த ஆரம்ப ஆண்டுகளிலும் நெருங்கிப் பழக வாய்த்திருக்கும் சமீபத்திய ஆண்டுகளிலும் அவருடைய எழுத்திலிருந்து ஆளுமையிலிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறேன். நண்பர்களுடனான உரையாடல்களை அவரைக் குறிப்பிடும்போது சலபதியார் என்பேன்.
சரி, சலபதி, யார்?
பொதுவாக நம்முடைய ஆளுமை உருவாக்கம் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து விவரம் தெரியத் தொடங்கும் காலகட்டத்தில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்கள், அனுபவங்கள் மூலம் பெரும்பாலும் வடிவமைக்கப்படுகிறது. அதாவது இன்னாரைப் பார்த்து நானும் இப்படி ஆக வேண்டும், ஏதோ ஓர் அனுபவத்தின் உந்துதலால் நான் எதிர்காலத்தில் இன்னதாக வர வேண்டும் என்பன போன்ற ஆசையும் கனவுகளும் உருப்பெறும். ஆனால் சலபதி இல்லாத ஒன்றிலிருந்து அதை உருவாக்கப் புறப்பட்டவர்.
அவர் படித்த சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் வ.உ.சி-யைப் பற்றி ஏதும் இல்லாததைக் கண்டு அதிர்ந்த சலபதிதான், 40 ஆண்டுகளுக்குப் பிறகு வ.உ.சி.யைப் பற்றிப் பேசாத ஒரு இந்திய ஊடகம்கூட இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறார். வ.உ.சி. என்னும் தமிழ்க் கப்பலை ஜெய்பூர் இலக்கிய விழாவுக்குச் செலுத்திய சலபதி, சாகித்திய அகாதெமியில் கொண்டு நிறுத்தியிருக்கிறார். அந்தக் கப்பலில் பாரதி இருக்கிறார், புதுமைப்பித்தன் இருக்கிறார், பெரியார் இருக்கிறார்; நாமும் இருக்கிறோம்.
‘பானை ஓட்டையானாலும் கொழுக்கட்டை வெந்துவிட்டது’ என அவர் தன்னைப் பற்றி பேட்டிகளில் குறிப்பிடுவார். அப்படிப் பார்த்தால், ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் எழுதி, தொகுத்து, பதிப்பித்து, மொழிபெயர்த்து அவர் நமக்குக் கொடுத்துள்ள கொழுக்கட்டைகளின் எண்ணிக்கை, அண்மையில் வெளியான புதுமைப்பித்தன் களஞ்சியத்தையும் சேர்த்து 58.
எங்கிருந்து தொடங்குவது? எங்கிருந்தும் தொடங்கலாம்!
சலபதியின் 50 வயது நிறைவை ஒட்டி நடந்த ‘விரிவும் ஆழமும்’ கருத்தரங்கில் பேசப்பட்ட தலைப்புகளைச் ‘சலபதி 50: தொடரும் பயணம்’ நூலின் முன்னுரையில் பழ. அதியமான் பட்டியலிடுகிறார்: மொழி ஆளுமை, தமிழ்நடை, வரலாற்றுப் பங்களிப்பு, பதிப்புப் பணிகள், சமூக வரலாற்றுப் பங்களிப்பு, நாட்டுப்புறவியல், தலித்திய ஆய்வுகள், பன்முகப் பரிமாணம், எழுதிய முன்னுரைகள், ஆசிரியத்துவம், சலபதியின் முதலாசிரியர்கள், திருநெல்வேலிக் காலம், காலச்சுவடு உறவு, மொழிபெயர்ப்புகள், சலபதி பேணிய நட்புறவு, ஆங்கிலப் படைப்புகள், சாமிநாதையர் பதிப்பு, பாரதி ஆய்வுகள் என நீளும் அந்தப் பட்டியலுக்குப் பிறகு, இதோ 8 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இவ்வளவு இருந்தாலும், நான் உடனடியாகப் பரிந்துரைப்பது, சில மாதங்களுக்கு முன் மறைந்த ‘பாவேந்தர்’ ஆய்வாளர் ச.சு. இராமர் இளங்கோவுக்கு அவர் எழுதிய அஞ்சலிக் குறிப்பைத்தான்; அது ஒரு கொழுக்கட்டைப் பதம். வெறும் 506 சொற்களால் அமைந்த அந்தக் குறிப்பைக் கொண்டு கடந்த 50 ஆண்டுக்காலத் தமிழ் அறிவுசார் வரலாறு குறித்து ஒரு கருத்தரங்கமே நடத்தலாம். இதையொட்டி முக்கியமான செய்தி ஒன்றைப் பகிர விரும்புகிறேன்.
கீத் ஸாயர் என்றொரு உளவியல் பேராசிரியர் இருக்கிறார். படைப்பூக்கம் - Creativity சார்ந்த நீண்டகாலமாக ஆய்வு மேற்கொண்டிருக்கும் அவர் தொழில்முறை கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள், இயங்குகிறார்கள், படைக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து சமீபத்தில் வெளியிட்டிருக்கும் நூல், Learning to See: Inside the World's Leading Art and Design Schools. இந்நூலின் ஒருபகுதி, அதைப் பதிப்பித்திருக்கும் எம்.ஐ.டி பிரஸ்ஸின் வலைப்பூவில் வெளியாகியிருந்தது. அஞ்சலிக் கட்டுரைகளை வாசிப்பது படைப்பூக்கத்தை எவ்வாறு உந்தும் என்பதுதான் அதன் சாராம்சம். இளங்கோவுக்கு எழுதப்பட்டது அஞ்சலிக் குறிப்புதான், ஆனால் அது ஒருவிதமான பரவசத்தைக் கொடுத்தது; எழுத்தெண்ணிப் படித்துச் சிலாகிக்க வேண்டும் என இப்போதும் தோன்றுகிறது. பல்லாண்டுகள் ஆய்வுசெய்து மேலைநாட்டுக்காரர் ஒருவர் பரிந்துரைக்கும் அம்சத்தை, வெகு இயல்பாக சலபதி நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை உதாரணத்துடன் விளக்குவதற்காகத்தான் கீத் ஸாயரை அழைத்தேன்.
கு. அழகிரிசாமி தொகுத்த ‘வழிவழி வந்த வசன நடை’யின் தொடர்ச்சியில் சலபதியின் வசன நடைக்கு இதைப் பரிசீலனையில் கொள்ள வேண்டும் என பழ. அதியமான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
சலபதியைப் பற்றிப் பேசும்போது அதியமானைப் பேசாமல் இருப்பது வரலாற்றுப் பிழையாகிவிடும். அதியமானின் மாலை நடைகளில் வேளை வாய்க்கும்போதெல்லாம் நான் அவருடைய வாக்கிங் பார்ட்னர் ஆவேன். 1980களின் கடைசியில் மறைமலையடிகள் நூலகத்தில் சலபதியும் அதியமானும் – சலபதி சொல்வதைப் போல் - ‘ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதைப் போல் தமிழ்நாட்டின் அறிவுச் சூழல் பற்றி பேசிய’ காலம்தொட்டு, அவர்களைப் பற்றிய பல்வேறு செய்திகளை ஆர்வத்துடன் கேட்டறிவேன். உங்கள் முதல் சந்திப்பு எப்போது என்று ஒருமுறை கேட்டபோது, சற்று யோசித்துவிட்டு தெரியவில்லை என்றவர், ‘ஜலபதி’யைக் கேளுங்கள் சொல்வார் என்றார். சில நாட்களில் எனக்கு அதற்கு விடையும் கிடைத்தது. ஒரு நூலின் முன்னுரையில், “மறைமலையடிகள் நூல்நிலையத்தில் 1987 ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று சந்தித்தபோது பொன்னியின் புதல்வர் தொடரின் பைண்டு தொகுதியைத் தேடி வந்திருந்தார் அதியன்,” என்று சலபதி பதிவுசெய்திருந்ததைப் படித்து நெகிழ்ந்துவிட்டேன். நான் எப்போதும் வியப்பும் பொறாமையும் கொள்ளும் நட்புகளில் ஒன்று அவர்களுடையது!
சலபதி அவரைவிட இரண்டு, மூன்று மடங்கு வயதில் பெரியவர்களுடனான நட்பில் தொடங்கி அவரது சமகாலத்தவருடான நட்பில் தொடர்ந்து ஒன்றிரண்டு மடங்கு வயதில் இளையோருடனும் நட்பில் பயணித்துக்கொண்டிருக்கிறார்.
ஆய்விலும் தனிவாழ்விலும் அவரிடமிருந்து எங்கள் தலைமுறையினர் கற்றுகொள்ள எவ்வளவோ இருக்கின்றன. இன்றைக்கிருக்கும் வசதிகள் வாய்த்திருந்தால் இப்போதைய அளவில் இரண்டு மடங்கு கொழுக்கட்டைகள் நமக்குக் கிடைத்திருக்கும்.
அறிவுத் துறையில் இயங்குவோர் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு மகிழ வேண்டும் என்பார் சலபதி. ‘உலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்கு’ என்ற பெருமிதத்துக்காக அல்ல; செய்ய வேண்டிய காரியங்கள் இங்குதான் ஏராளம் உள்ளன என்பது அதன் உட்கிடை. இன்றைய ஆய்வுலக இளையோர் பயணிக்க வேண்டிய திசையைச் சலபதி துலக்கப்படுத்தியிருக்கிறார். அவரது பயணச் சுமையைக் குறைத்து பெரியார் வாழ்க்கை வரலாறு போன்ற பணிகளில் அவர் தன்னை முழுமையாகக் கரைத்துக்கொள்ள அவருக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.
இறுதியாக,
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்
சலபதியை வெளிநாட்டோரும் வணக்கம் செய்தலைக் காண பாரதி இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பார்.
ஆசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளும் வணக்கங்களும்!
நன்றி.



