நான் சென்னைக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன; ஆனால் அதற்கு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே என் மனம் சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டது.
மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ஆபத்திலா ஓரத்தில் நின்று வெகு தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியைப் பற்றிப் படித்த நொடியில், புதுமைப்பித்தனை என்னை அள்ளிக்கொண்டுவந்து சென்னையில் போட்டுவிட்டார். [இப்போது நான் வசிப்பது கந்தசாமிப் பிள்ளையவர்களின் வீடு அமைந்திருந்த ‘ஆபீஸ் வேங்கடாசல முதலி சந்து’க்கு (இப்போது ஓ.வி.எம். ஸ்ட்ரீட்) அருகமைந்திருக்கும் ‘அருணாச்சல ஆசாரி தெரு’வில் தான் (இப்போது அருணாச்சலம் தெரு)].
நவீனத் தமிழிலக்கிய முன்னோடிகள், சென்னைக்கு வந்து இலக்கியத் தவம் இயற்றிய வரலாறுகளைப் படித்துப் பித்தேறிச் சென்னைப் பைத்தியம் பிடித்தது எனக்கு; என் மனக்கால்கள் சென்னையின் தெருக்களை அளக்கத் தொடங்கின. பாரதியின் திருவல்லிக்கேணி தொடங்கி ‘மணிக்கொடி’ காரியாலயம் அமைந்திருந்த ‘சாலெ மான்ஷன்ஸ்’ தொட்டு புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், பிரமிள் வரை நீளும் ஒரு பட்டியலைத் தயாரித்து அவர்கள் தொடர்பில் ‘சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள்’ (இது யாருடைய சிறுகதை ஒன்றின் தலைப்பு என்று சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள்) என இலக்கிய வரைபடம் ஒன்றையும் உருவாக்கி இருந்தேன். [தமிழ் சினிமா தொடர்பிலும் இப்படி ஒரு வரைபடம் என்னிடம் உண்டு].
நான் சென்னைக்கு வந்துபோகத் தொடங்கிய நாட்களிலும் வேலைநிமித்தமாக வந்தேவிட்ட பிறகும், அந்த இலக்கிய வரைபடத்தின் கோடுகளில் அலையத் தொடங்கினேன்.
அப்படித்தான் ஒருமுறை ‘19-A பிள்ளையார் கோவில் தெரு, திருவல்லிக்கேணி’ என்கிற முகவரியைத் தேடிச் சென்றேன். சி.சு. செல்லப்பா அங்குதான் வாழ்ந்தார்; ‘எழுத்து’வின் காரியாலயமும் அதுதான். எண்கள் மாறியிருந்ததாலும் இதைத் தவிர வேறு எப்படிச் சொல்லி அடையாளம் கேட்பது எனத் தெரியாததாலும் அந்த வீட்டை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. அன்று என்னால் அடையாளம் காணமுடியாத அந்த வீட்டுக்கும் செல்லப்பா வசித்த அந்தப் பகுதியில் அமைந்திருக்கும் மற்ற வீடுகளுக்கும் செல்லப்பாவின் மகன் திரு. செ. சுப்ரமண்யன் இன்று என்னை அழைத்துச் சென்றார். நண்பர் ‘அழிசி’ ஸ்ரீநிவாசன், ‘எழுத்து’ இதழை அமேசான் கிண்டிலில் வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அதைப் பற்றி ‘ஆனந்த விகட’னில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன்; அக்கட்டுரைக்காக அவரிடம் பேசியதுதான் முதல் அறிமுகம்.
2024 பிப்ரவரியில் சி.சு. செல்லப்பா நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவின் தொடக்க விழாவுக்காகச் சென்னைக்கு வந்திருந்தவரிடம், செல்லப்பா வாழ்ந்த இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று அவை குறித்த நினைவுகளைப் பகிர வேண்டும் என அவரிடம் நான் ஒரு விண்ணப்பத்தை வைத்தேன். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அவர், தற்சமயம் அதற்குரிய நேரம் தனக்கு இல்லை என்பதால், அடுத்த முறை வரும்போது நிச்சயம் போகலாம் என்றவர் இதற்காகவே கூட ஒருமுறை வருகிறேன் என உறுதியளித்தார்.
அதை இன்று நிறைவேற்றிக் கொடுத்தார்.
காலை 6 மணியளவில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை - பிள்ளையார் கோவில் தெரு சந்திப்பில் தொடங்கிய எங்கள் பயணம், செல்லப்பா ‘வாழ்ந்த’ 19-A வீடு, பிறகு அவர் ‘வசித்த’ சன்னதி தெரு ‘சம்பந்தர் இல்லம்’, லால் பேகம் தெரு வீடு என அவர் தொடர்புடைய இடங்களைப் பற்றியெல்லாம் நினைவுகளை மீட்டெடுத்து எனக்குக் கையளித்தார் சுப்ரமண்யன்.
விகடனில் நான் எழுதிய கட்டுரையின் முதல் வரி இது: “‘19-A, பிள்ளையார் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5’ என்ற முகவரியில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியத்தின் வேர் ஆழப்பட்டிருந்தது.”
அந்த வேரின் அடியில் காலம் என்னைக் கலைத்துப் போட்டிருக்கிறது.