“தேர்தல் 2024: மீளும் ‘மக்கள்’ ஆட்சி” - நூல் வெளியீட்டு விழா அழைப்பு
காலப்போக்குகளை உடனுக்குடன் பதிவுசெய்யும் ஆழி பதிப்பக மரபில் முக்கிய நூலாக அமையும் இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்!
ஆழி பதிப்பகம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமகால அரசியல், வரலாறு உள்ளிட்ட தலைப்புகளில் முக்கியமான நூல்களை வெளியிட்டு வருகிறது. ஆழி பதிப்பகத்தின் புதிய வெளியீடாக, நான் தொகுத்துள்ள தேர்தல் 2024: மீளும் ‘மக்கள்’ ஆட்சி என்னும் நூல் வெளிவர உள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழா செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு, சென்னை தியாகராய நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றவிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு. ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ., மூத்த பத்திரிகையாளர் திரு. ஜென்ராம், அரசியல் செயற்பாட்டாளர் திருமிகு. தீஸ்தா செதல்வாட், மூத்த பத்திரிகையாளர்; FRONTLINE முன்னாள் ஆசிரியர் திரு. விஜயசங்கர் ராமச்சந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலின் ஏறக்குறைய எல்லா அம்சங்களைப் பற்றிய விரிவும் ஆழமும் கூடிய கட்டுரைகள் இடம்பெறும் இந்நூலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்புக் கட்டுரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, எப்படி இந்தத் தேர்தலிலும் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது என்பதை விளக்கி, 2029 தேர்தலுக்கான பிரகடனமாகவும் முதலமைச்சர் அவர்களின் கட்டுரை அமைந்துள்ளது. ‘மக்கள்தான் அரசு; அரசமைப்புதான் அடிப்படை’ என்பதுதான் இத்தேர்தலின் செய்தி. அதன்படி அரசமைப்பு தொடங்கி சுற்றுச்சூழல் வரை; நேரு தொடங்கி புத்தாயிரக் குழந்தைகள் வரை இத்தேர்தலின் ஒவ்வொரு அம்சத்தை ஆய்வுசெய்யும் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
காலப்போக்குகளை உடனுக்குடன் பதிவுசெய்யும் ஆழி பதிப்பக மரபில் முக்கிய நூலாக அமையும் இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.


