அமிதாவ் கோஷ்: இரண்டு (தமிழ்) நேர்காணல்கள்
“இப்போது நாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியை நகர்த்திச் செல்வது உலகளாவிய ஏற்றத்தாழ்வுதான்.”
இந்து தமிழ் திசையின் உயிர் மூச்சு இணைப்பிதழில், எழுத்தாளர் அமிதாவ் கோஷின் நேர்காணல் இன்று (ஜூலை 29, 2023) வெளியாகியிருக்கிறது. 2021இல் ஆனந்த விகடனுக்காக நான் எடுத்திருத்த நேர்காணலைத் தொடர்ந்து, தமிழில் வெளியாகும் அவரது இரண்டாவது நேர்காணலாக இது அமைகிறது.
இந்த நேர்காணலை முன்னிட்டு, கடந்த புதன்கிழமை (ஜூலை 26) அமிதாவ் கோஷ்-ஐச் சந்தித்தேன். ‘Smoke and Ashes: A Writer’s Journey through Opium’s Hidden Histories’ (HarperCollins) என்கிற அவரது சமீபத்திய நூலின் சென்னை வெளியீட்டின்போது சந்திக்க விருப்பம் தெரிவித்து சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு எழுதியிருந்தேன். பதிப்பாளரின் ஏற்பாட்டின் பேரில், தாஜ் கன்னிமாராவில் சந்திப்பு நடந்தது.
என்னுடைய சிந்தனையில் ஆழ்ந்த தாக்கம் செலுத்தி, இதழியல்-எழுத்துத் துறையில் நான் பயணிக்க வேண்டிய திசையைத் துலக்கப்படுத்திய நூல்களில் முதன்மையானது, அமிதாவ் கோஷ் எழுதிய The Great Derangement: Climate Change and the Unthinkable. தொழில்முறை இதழாளனாக இந்து தமிழ் நாளிதழில் என்னுடைய பணியைத் தொடங்கியபோது, நான் எழுதிய முதல் கட்டுரைகளில் ஒன்று, இந்த நூலை அடிப்படையாகக் கொண்டதுதான். காலநிலை மாற்றம் சார்ந்த என்னுடைய தேடலும் வாசிப்பும் இந்த நூலில் இருந்துதான் விரிந்தன. அதன் விளைவுகள் இரண்டு: ஒன்று, கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் மூலமாக வெளியான பூமி இழந்திடேல் தொகுப்பு; இரண்டு, உயிர் மூச்சு இணைப்பிதழில் நான் தற்போது எழுதிவரும் ‘பூவுலகு இன்று’ தொடர்.
பூமி இழந்திடேல் தொகுப்பின் உள்ளடக்கத்தை அவரிடம் விளக்கிக் கூறினேன்; அவருடைய நேர்காணல் ஒன்றும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்ந்தார். உயிர் மூச்சு தொடரின் பகுதிகளைப் பார்த்து வியந்தார். தமிழில் இப்படியான முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றார். என்னிடமிருக்கும் அவரது நூலின் பிரதிகளில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டேன். 2019இல் The Gun Island நாவல் வெளியீட்டின்போது, The Great Derangement நூலில் ஏற்கெனவே வாங்கியிருந்த கையெழுத்தைக் காட்டிச் சிரித்தேன். பேச்சின் முடிவில், கனலி தொகுப்பை ஆர்வத்துடன் கையிலேந்தி அவரது செல்பேசியில் படமெடுத்துக் கொண்டார்.
சுமார் 40 நிமிடங்கள் நீடித்த உரையாடலின் பகுதிகள் இன்று வெளியாகியிருக்கின்றன.