1. ‘பிரச்னை’
சொந்த வேலையாக நேற்று கீழக்கரை சென்றிருந்தேன். ஊருக்குத் திரும்ப மாலை ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கடும் கூட்ட நெரிசலில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு வண்டி பிடித்தேன்; இருக்கை கிடைத்துவிட்டது. மூச்சடைக்கும் நெரிசலில் பேருந்தின் பின்பகுதியில் திடீர் சலசலப்பு. நிற்கக் கூட இடமில்லாத நிலையில் பைகளை வைப்பதில் இரண்டு பெண்களிடையே கடுமையான ‘சொற்போர்’ மூண்டுவிட்டது; சளைக்காமல் மாறி மாறி ஏசிக் கொண்டனர். சக பயணிகள் வேண்டல்கள் அதட்டல்களாக மாற கைகலப்பாக மாறும் முன்னர் சூழல் சற்றே தணிந்தது. சில நொடிகள் கடந்திருக்கும்... அவர்களில் ஒருவர் தன்னுடைய பையை எங்கே வைப்பதாம் என அங்கலாய்த்தபோது, ‘ஆ.. தூங்கி தலைமாட்டுல வையி’ என்று ஆவேசமாகச் சொன்னார் அவருடன் மல்லுகட்டிய அம்மாள். எல்லோருமாகக் கொல்லெனச் சிரித்தபோது தவிர்க்கவியலாமல் ஞானக்கூத்தனின் ‘பிரச்னை’ கவிதை நினைவுக்குவரவே, எனக்கு ஒரு நொடி விதிர்த்துவிட்டது.
2. ‘காலவழுவமைதி’
த.வெ.க. மாநாட்டில் விஜய் பேச்சை நேரலையில் பார்த்துக்கொண்டே நண்பன் சுரேஷ் குமாரும் நானும் அதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். ‘அவர்களே’ என விளித்துப் பேசும் மேடைப் பண்பாட்டை விஜய் இகழ்ந்தபோது பேச்சு இயல்பாக திராவிட இயக்கப் பேச்சாளர்களில் வந்து நின்றது - அப்போது வைகோவின் உரை ஒன்றின் சிறு துண்டை சுரேஷ் பகிர்ந்தார். விஜய்யின் ஏளனத்தைச் சுட்டி இஸ்க்ரா நல்ல பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல் பேச்சுக் கலை மரபைப் பற்றி தனி ஆய்வு செய்த அமெரிக்க நாட்டுப்புறவியலாளர் பெர்னார்ட் பேட், தொ. ப-வுடனான உரையாடல்கள் வழி, ‘அவர்களே’யின் முக்கியத்துவத்தை அறிந்ததையும், வைகோவின் பேச்சு பற்றிய பேட்-இன் அவதானிப்பையும் நூலில் இருந்து எடுத்துக்காட்டியிருக்கிறார். இஸ்க்ராவின் பதிவைப் படித்தவுடன் ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ கவிதை என்னை ஆக்கிரமித்துக் கொண்டது.
“தலைவரார்களேங்…
தமிழ்ப்பெருமாக்களேங்…”
எனத் தொடங்கும் அக்கவிதையுடன் ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு’ உள்ளிட்ட கவிதைகளுடன் திராவிட இயக்கத்தை ‘நோக்கிய’ இலக்கியப் ‘பதிவு’கள் பற்றிய சமரசமற்ற ஆய்வுகள் இன்றைக்குத் தேவை எனத் தோன்றுகிறது; ‘கூத்தாடி’ என்கிற பொருண்மையும் அத்தகைய ஆய்வினை வேண்டுகிறது. வெகுஜனத் தளத்தில், “புதுத் தளபதி ரஜினிதான்” என்கிற புரிதலில் உழலும் ஈராயிரக் குழவிகளின் வாழ்வியலைப் படிக்க தனித் துறை ஒன்றையே நிறுவ வேண்டும் போலிருக்கிறது.
இவற்றைப் பற்றியெல்லாம் ஆழி பதிப்பகம் ஆழ்ந்த கவனம் கொண்டிருக்கிறது... இவை தொடர்பில் முக்கியப் பகிர்வுகளை எதிர்பாருங்கள்.
சிறப்பு