Career update: இதழியலில் இருந்து பதிப்புலகுக்கு
‘இன்று’ நண்பர்களுக்கு வணக்கம்!
என் வாழ்வின் அடுத்தகட்ட நகர்வு பற்றிய செய்தியை உங்களிடம் பகிர்வதில் மகிழ்கிறேன்.
ஆழி பதிப்பகத்தின் Publishing Manager & Editor ஆக ஜூன் 3, 2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்டேன்.
இதழியல்தான் என்னுடைய துறையாகவும், இதழாளன் என்பது என்னுடைய முதன்மையான அடையாளமாக இருந்துவந்திருந்தாலும் நெடுங்காலத்தில் பதிப்புத் துறையில் இயங்க வேண்டும் என்கிற என்னுடைய விருப்பத்துக்கும் அதற்கு நான் செலுத்திய உழைப்புக்கும் காலம் வழங்கிய பரிசு என இதைக் கொள்கிறேன். இதைத் தொட்டு இனி அவ்வப்போது எழுதுவேன் என்றாலும், இதழியலில் தொடங்கிய என்னுடைய வாழ்க்கை, பதிப்புக்கு வந்தடைந்திருக்கும் நிகழ்வு குறித்து சில எண்ணங்களை மட்டும் இங்கே பகிர விரும்புகிறேன். என்னை அறிந்தவர்களும் ‘இன்று’ மின்மடலை மேலோட்டமாக வாசித்துவருபவர்களும்கூட ஏற்கெனவே அறிந்தவை என்றாலும், இப்பதிவின் முக்கியத்துவம் கருதி அவற்றை மீண்டும் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் இதழியலில் பட்ட மேற்படிப்புப் பயின்றபோது (2017-2019), பணியிடப் பயிற்சிக்கு நான் செல்ல விரும்பிய இடம் ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்கம்; என் விருப்பம் ஈடேறியது. 2018 மே மாதம் தொடங்கிய பணியிடப் பயிற்சியில், முதல் சில நாட்கள் நடுப்பக்க இயக்கத்தின் ‘பார்வையாள’ராகப் பணிக்கப்பட்டிருந்தேன்; நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதே பக்கத்தின் இயக்கத்தில் ஓர் அங்கமாக, உதவி ஆசிரியராக ஆகியிருந்தேன்.
ஓர் இதழாளனாக ஆக வேண்டும் என்கிற என்னுடைய சிறுவயதுக் கனவு செயலூக்கம் பெற்றது ஆண்டனி ஷடீட் என்கிற போர் செய்தியாளரின் மரணம் பற்றிய செய்தியை 2012ஆம் ஆண்டு ‘தி இந்து’வில் வாசித்தபோதுதான்; அப்போது நான் 10ஆம் வகுப்பிலிருந்தேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, போர் செய்தியாளர் ஒருவரை ‘இந்து தமிழ் திசை’க்காகப் பேட்டி கண்டிருப்பதன் வழி, இதழாளனாக என்னுடைய பயணம் ஒரு சுற்று வந்திருப்பதாகக் கருதுகிறேன்.
தொழில்முறை இதழாளனாக தற்போது ஐந்தாம் ஆண்டை நிறைவுசெய்கிறேன். என்றாலும், இதழாளனாக ஆக வேண்டும் எனத் தீர்மானித்துவிட்ட நொடியிலிருந்தே என்னை ஓர் இதழாளனாகவே நான் கருதிக் கொண்டேன்; அப்போதிருந்தே அதற்காக என்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளத் தொடங்கினேன். அத்தகைய ஊக்கமும் உழைப்புமே இதழியலில் நான் எட்ட விரும்பிய இடங்களை, நான் நிர்ணயித்திருந்த காலத்துக்கு முன்பே என் கைக்குக் கொண்டுவந்தன. அந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, அதிகபட்ச பணிகளைச் செய்திருக்கிறேன் என்கிற நிறைவு எனக்கு உண்டு.
இதழியல் அனுபவங்கள், பதிப்பு - புத்தகம் சார்ந்த திட்டங்கள் என உங்களிடம் பகிர்வதற்கு ஏராளமாக உள்ளன. ‘இன்று’ வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவிருக்கும் நிலையில், சீரான இடைவெளியில் அவை குறித்து எழுத உத்தேசம்.
ஆழி பதிப்பகத்தின் நிறுவனர், பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் ஃபேஸ்புக்கில் எழுதிய குறிப்பு: https://www.facebook.com/senthilnathan.aazhi/posts/pfbid02nRqyinkV9SbzbSsshHsbpkUNt3nt6yGGiMJCQK9HZgx6vVjGdNuyRk3aYaf77aRLl